தேனி நகராட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சபரி இளங்கரனுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
5 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை!
நகராட்சிப் பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்று சபரி இளங்கரன் குற்றம்சாட்டினார். பொதுமக்களிடமிருந்து பெற்ற புகார் மனுக்களையும் அவர் முன்வைத்தார்.
பேசுவதற்கு உரிமை இல்லை எனக் கூறிய திமுக தரப்பு!
இதற்குப் பதிலளித்த நகராட்சித் தலைவர் ரேணுகா பிரியா மற்றும் துணைத் தலைவர் செல்வம், நகராட்சிக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுவதற்கான உரிமை குறித்துக் கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்திலிருந்து வெளியேறிய சபரி இளங்கரன், தன்னைப் பேசவிடாமல் திமுக கவுன்சிலர்கள் தடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுபோன்று இரண்டாவது முறையாகத் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தேனி நகராட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

